Causes-and-maintenance-methods-for-hair-loss-Tamil தலைமுடி கொட்டுவதற்கு காரணங்களும் பராமரிப்பு முறைகளும்...!!
முதலில் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.
தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்து குறைவு தான் முக்கியக்காரணம். இதற்கு வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக உணவில் தினமும் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டாலே சரியாகி விடும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
குறிப்பிட்ட அளவு கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த் தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.
அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதுவரை நாம் பார்த்தது நமது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. இனி கூந்தலுக்கு நாம் செய்யும் தொந்தரவுகள் என்னவென்பதைப் பார்க்கலாம்.
குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றினால் குளித்த பிறகு கூந்தலில் அதிக சிக்கு ஏற்படாமல் இருக்கும். கண்ட ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல தலை. எனவே, தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள்.
அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக நிறைய தண்ணீர் விட்டு அலசவும்.
தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.
உலர்ந்த நெல்லிக்காய் கடைகளில் கிடைக்கும். அதை தேங்காய் எண்ணெயில் போட்டு சூடாக்கவும். எண்ணெயின் நிறம் கருப்பாக மாறும். அதை தலையில் தடவி சிறிது நேரத்தில் அலசி விடலாம் அல்லது அந்த எண்ணெய்க்கு மேல் நெல்லிக்காய் பொடியும் சீயக்காய் பொடியும் சம அளவு கலந்த கலவையால் அலசலாம். வறண்ட கூந்தல் உள்ளவர்கள் சீயக்காயைத் தவிர்த்து வெறும் நெல்லிக்காய் பொடியை மட்டும் உபயோகிக்கலாம்.
மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம்.
குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள்.
ஹேர் ட்ரையரை, முடியின் நுனிப்பாகத்தைவிட வேர்ப்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.
உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலைக்கு குளித்ததும் உடனடியாக உங்கள் சீப்புகளையும் நன்கு கழுவுவது நல்லது. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது நல்லது.
சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை நல்ல முறையில் பராமரித்தால் அழகிய கூந்தலைப் பெறலாம். பெரும்பாலும் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.
உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்குப் பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
பலரும் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் இருக்கின்றனர். அதனால் தலைக்கும் பாதிப்பு, அவர்களது உடல்நிலைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வாரத்தில் ஒரு முறையாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தலை முடியையும், சருமத்தையும் பாதுகாப்போம்.
என்னதான் லேட்டஸ்ட் சிகிச்சைகளும் வெளிப்பூச்சுகளும் கூந்தல் உதிர்வுக்கு உதவுவதாக உத்தரவாதம் தந்தாலும், பாரம்பரியமான பாதுகாப்பு முறைகளைப் போல பலன் தருவதில்லை என்பதுதான் உண்மை. கூந்தலின் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியதென காலங்காலமாக நிரூபிக்கப்பட்ட சில எளிய பொருட்களை முறையாகப் பயன்படுத்தத் தொடங்கினாலே, முடிப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தேங்காய்ப் பாலுக்கு திசுக்களை ஊட்டப்படுத்தும் குணம் உண்டு. கூந்தலைப் பலப்படுத்துவதில் இதற்கு இணையே இல்லை. தேங்காயைத் துருவி, கைகளால் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். அதை கூந்தலில் நன்கு ஊடுருவும்படி தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் ஊறிய பிறகு சீயக்காய் உபயோகித்து அலசவும்.
மண்டைப் பகுதியின் பி.ஹெச். அளவை சமநிலையில் வைத்திருக்கும் தன்மை கொண்டது கற்றாழை. கற்றாழைச் செடியின் ஜெல் போன்ற பகுதியை நன்கு அலசி எடுத்து மசிக்கவும். அதைத் தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைக் கட்டி சில நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும். பிறகு 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 6 துளிகள் வீட்ஜெர்ம் ஆயில், 1 டீஸ்பூன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து மறுபடி தலையில் தடவி, லேசாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து அலசவும்.
தலைமுடிக்கு முறையாக ஆயில் மசாஜ் கொடுக்க வேண்டியது அவசியம். வெறும் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடாக்கி, தலையில் தடவி, மசாஜ் செய்து மைல்டான ஷாம்பு உபயோகித்து அலசலாம். இப்போது ஜோஜோபா ஆயில், பாதாம் ஆயில், கடுகெண்ணெய், லேவண்டர் ஆயில் ஆகியவை கலந்த தேங்காய் எண்ணெய் கிடைக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றைக்கூட தலைக்கு மசாஜ் செய்யப் பயன்படுத்தலாம்.
கைப்பிடி அளவு வேப்பிலையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். பாதியாக வற்றியதும் ஆற விடவும். 1 டீஸ்பூன் வேப்பெண்ணெயை தலையில் தடவி, மசாஜ் கொடுத்து, ஆற வைத்துள்ள வேப்பிலைத் தண்ணீரால் அலசி, பிறகு வழக்கம் போல ஷாம்பு அல்லது சீயக்காய் உபயோகித்து அலசவும். இது பேன், பொடுகுத் தொல்லையை விரட்டி, கூந்தலின் ஆரோக்கியம் காக்கும்.
ஒரு கப் தயிரில், 1 டீஸ்பூன் வால் மிளகுத் தூள் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால், கூந்தல் உதிர்வும் கட்டுப்படும். பளபளப்பும் கூடும்.
கற்றாழை ஜூஸ் உடன் நெல்லிக்காய் பொடி, சீயக்காய் பொடி மற்றும் வேப்பிலைப் பொடி சம அளவு கலந்து பேஸ்ட் போலச் செய்து தலைக்கு பேக் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து அலசலாம்.
1 கப் மருதாணிப் பொடியு டன், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது தயிர் கலந்தும் பேக் போடலாம். வேப்பிலை விழுது, ஆப்பிள் விழுது, பாதாம் விழுது மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கலந்து தலைக்கு பேக் போட்டுக் குளித்தால், இன்ஃபெக்ஷனால் ஏற்படுகிற முடி உதிர்வு நிற்கும்.
இவை தவிர....
தலை குளிக்க வெந்நீர் வேண்டாம். மிதமான சூடுள்ள தண்ணீரையே உபயோகிக்கவும். அடிக்கடி அயர்னிங், ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்ற கெமிக்கல் சிகிச்சைகள் செய்வதைத் தவிர்க்கவும்.
வைட்டமின் ஏ, பி, சி, டி மற்றும் இரும்புச் சத்துள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும். நட்ஸ், கீரை சேர்த்துக்கொள்ளவும்.
கோபப்பட்டால் முடி கொட்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தேவையில்லாமல் தலைக்கு ஸ்டைலிங் பொருட்களையும் கண்டிஷனரையும் உபயோகிக்க வேண்டாம்.
No comments:
Post a Comment